தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன் காரணமாக, தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி பயிற்சி வகுப்புகள் என அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடைகள், ஷு, அடையாள அட்டைகள் என, தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக வழங்கப்பட்டுள்ளது.
கணினி மாணவர்கள் கல்வி பயிலும் வகையில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது. நவீன யுகத்தில், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், நவீன முறையில் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கும் வகையிலும் இந்த ஸ்மார்ட் வகுப்பறை துவக்கப்பட்டுள்ளது. கணினி திரையில் மாணவர்களுக்கு ஒலி, ஒளி வடிவில் பாடங்களை கற்பிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் வகுப்பறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில், மேலும் ஒரு சிறப்பு அம்சமாக, மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்தவுடன் பெற்றோருக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பும் கருவி, திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.
மாணவர்கள் அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள சிப் மூலம் குறுஞ்செய்தி பெற்றொருக்கு அனுப்பும் வகையிலும், பள்ளியை விட்டு வெளியே சென்றவுடன் மீண்டும் பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதியும் ஸ்மார்ட் கருவியில் உருவாக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.