கொரோனா பரிசோதனைக்கு, பெலுடா என்ற புதிய பரிசோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
சண்டே சம்வாத் 5 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தனது சமூக வலைதளத்தில், கோவிட் -19 தொடர்பாக கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, கொரோனா பரிசோதனைக்கு பெலுடா என்ற புதிய பரிசோதனை முறை, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக, 2000 நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவுகள் 98 சதவீதம் துல்லியமாக இருந்ததாக தெரிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசிக்கான முதல் கட்ட பரிசோதனை முடிந்து , 2ம் கட்ட பரிசோதனைகள் நடந்து வருவதாகவும், 3ம் கட்ட பரிசோதனை தொடரவுள்ளதாகவும் கூறினார். மேலும், தடுப்பூசிகள் குறித்து தற்போது பரிசோதனை நடந்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.