குழந்தைகள் வரையும் ஓவியங்களுக்கு ஏற்ப பாட்டு பாடும் செயலி, சென்னை புத்தக திருவிழாவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் நடைபெற்றுவரும் 43 ஆவது சென்னை புத்தகத் திருவிழாவில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆர்வத்தையும் ஈர்க்கும் பல்வேறு விதமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன.
புத்தகங்களைத் தாண்டி, குழந்தைகளின் வரையும் திறனை ஊக்குவிக்கும் விதமாக, மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் காகிதத்தில், தாங்கள் வரைந்த ஓவியங்களுக்கு ஏற்ப பாட்டுப் பாடும் வகையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள “இங்க்மியூ” என்ற செயலி, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குழந்தைகள் உள்ள வீடுகள் என்றாலே, சுவரில் கிறுக்கல்கள் இல்லாமல் இருக்காது. ஆனால், பெற்றோருக்கு அது பிடிக்காத விஷயம். இதற்கு தீர்வாக, குழந்தைகள் சுவரில் வரைவதை தவிர்த்து, சுவரில் ஒட்டப்பட்ட மறுசுழற்சி காகிதங்களில் வரையும் முறையை, மேஜிக் பாக்ஸ் பதிப்பகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆண்ட்ராய்ட் கைபேசிகளில், இந்த இங்க்மியூ செயலியை பதிவிறக்கம் செய்து, நாம் வாங்கி வைத்திருக்கும் மறுசுழற்சி காகிதம், புத்தகத்தில் உள்ள குறியீட்டு எண்ணை பதிவேற்றம் செய்துவிட்டால், பின்னர் ஆஃப் லைனில் இருக்கும்போது, அந்த காகிதம், புத்தகத்தின் அருகே கைபேசியை கொண்டு செல்லும் போது, அவற்றில் உள்ள படங்கள் தொடர்பான பாடல், கைபேசியில் ஒலிக்கும். மேலும், அந்த காகிதங்களில் உள்ள படங்களுக்கு, எந்தவிதமான வர்ணம் பூசலாம் என்பதும், கைபேசியில் உள்ள செயலியில் காண்பிக்கப்படும். இதனால், சுவற்றில் எழுதுவதை தவிர்த்து, குழந்தைகள் இதில் ஆர்வம் காட்டுவார்கள் என்று கூறுகிறார் செயலியை வடிவமைத்துள்ள சதீஷ்…
உருவங்கள், எழுத்துக்கள், குழந்தைகளுக்கான பாடல்கள் என பல விதமான உள்ளடக்கங்களைக் கொண்ட, அழித்துவிட்டு மீண்டும் எழுதக்கூடிய மறுசுழற்சி காகிதங்கள் மற்றும் புத்தகங்கள், நூறு ரூபாய் முதல் அதிகபட்சம் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
குழந்தைகள் சுவரில் வரைவதை தவிர்ப்பதோடு, அவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும் வகையில் உள்ள இதனை, பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளுக்கு வாங்கி தருகின்றனர்.
மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள இந்த மறுசுழற்சி காகிதமும், தங்களுடைய ஓவியங்களுக்கு ஏற்ப பாட்டு பாடும் இந்த செயலியும், தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாக கூறுகின்றனர் குழந்தைகள்.
மாறிவரும் நவீன காலகட்டத்துக்கு ஏற்ப, குழந்தைகளின் திறனை ஊக்குவிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இம்முயற்சி, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.