சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் பிளண்ட்ஸ் விங்க் மாதிரி விமானம் அறிமுகம்

சிங்கப்பூர் விமானக் கண்காட்சியில் சர்வதேச விமானத் தயாரிப்பாளரான ஏர்பஸ் நிறுவனம் பிளண்ட்ஸ் விங்க் ((  blends wing)) எனப்படும் புதுவகை இறக்கைகளுடன் வடிவமைக்கப்பட்ட மாதிரி விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிளண்ட்ஸ் விங்க்களுடன் விமானங்களை தயாரிக்கும் ஆராய்ச்சிகள் 1900ம்  ஆண்டிலிருந்து நடைபெற்று வருகின்றன.  நிக்கோலஸ் என்பவர்  வெஸ்ட்லேண்ட் டிரெட்னெளட் என்ற பெயரில் ஒரு விமானத்தை வடிவமைத்தார். ஆனால் இந்த விமானம் விபத்தில் சிக்கியதால்  இந்த திட்டத்தை அவர் கைவிட்டார். இதைத் தொடர்ந்து  1940ல் வடிவமைக்கப்பட்ட மைல்ஸ்  எம் 30 என்ற விமானமும் 1944ல் வடிவமைக்கப்பட்ட மெக்டொனால் எம்பி என்ற விமானமும் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யமால் தோல்வியுற்றன

இதன் பின்னர் 1990 இல் நாசா பிளண்ட்ஸ் விங்க்கள் கொண்ட ஆளில்லா விமானங்கள் தயாரிப்பில் இறங்கியது. இதில் வெற்றிகண்ட நாசா பல்வேறு ஆய்வறிக்கைகளை வெளியிட்டதுடன், இந்த விமானங்கள் மூலம் 20 சதவீதம் வரை எரிபொருளை சேமிக்கலாம் எனவும் அறிவித்தது
இத்தகைய விமானங்கள் குறைந்த அளவு ஒலியை எழுப்புவதால் ஒலி மாசு குறையும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஏர்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு உள்ள மாதிரி விமானம் 6 புள்ளி 5 நீளமும் 7 புள்ளி 5 அடி அகலமும் கொண்டுள்ளது. அடுத்த பத்து வருடங்களில் ஆயிரம் விமானங்களை தயாரிக்க முடியும் எனவும்  ஏர்பஸ் நிறுவனத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சர்வதேச அளவில் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கும் சூழலில் மாற்று எரிபொருளை பயன்படுத்த அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் ஏர்பஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி வெற்றி பெற்றால் அனைத்து நாடுகளும் இத்தகைய விமானங்களை பயன்படுத்த முயற்சி செய்யும். ஆனால் இத்தகைய விமானங்கள் வடிவமைப்பதில் பல்வேறு சவால்களை விமான தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. பிளண்ட்ஸ் விங்க் விமானங்களில் சாதாரண பயணிகள் விமானங்களில் உள்ளது போல ஜன்னல்கள் வைப்பது என்பது கடினமான காரியமாகும். இதனால் விர்ச்சுவல் விண்டோஸ் என அழைக்கப்படும் மெய்நிகர் ஜன்னல்களை வடிவமைக்கலாம் என விஞ்ஞானிகள் யோசனை தெரிவித்துள்ளனர். எனினும் விமானம் பறக்கும் போது விர்சுவல் விண்டோ வழியாக பார்க்கும் பயணிகளுக்கு தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய விமானத்தில் குறைவான எண்ணிக்கையிலான அவசர வழிகள் இருப்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது.  பிளண்ட் விங்க்ஸ் விமானத்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகள் விமானம் திரும்பும்போது சாதாரண விமானங்களில் உணர்வதை விட அதிகமாக வெளியே தள்ளபடுவது போல் உணர்வார்கள் என்பதால் இதற்கு ஏற்றார் போல் இருக்கைகளின் வடிவமைப்பையும் மாற்ற வேண்டியது அவசியம். எனினும் இத்தகைய அனைத்து குறைகளையும் சரி செய்து முதல் விமானத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏர்பஸ் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Exit mobile version