இந்தியாவில் முதல் முறையாக நாய்களுக்கான ரத்ததான கைபேசி செயலி அறிமுகம்

இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், நாய்களுக்கு என்று ரத்த தானம் குறித்த கைபேசி செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

நமது வீட்டில் உள்ள நபரை போலவே பார்க்கப்படும் செல்லப் பிராணியான நாய்கள் மீது, அனைவருக்கும் ஒரு விதமான ஆதீத அன்பு உண்டு… நாய்களை பாதுகாப்பதிலும், பேணி வளர்ப்பதிலும் மக்கள் அக்கறை காட்டி வரும் நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், நாய், பூனை ஆகிய வீட்டு விலங்குகளின் தொகை பெருக்கத்தை நவீன கருத்தடை முறை மூலம் கட்டுப்படுத்துவதிலுள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய தேசிய கருத்தரங்கம், இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், அறுவை சிகிச்சை இல்லாத, எளிதான, விரைவான முறையில் புதுமையான கருத்தடை முறைகள், அதன் தேவைகள் பற்றிய சொற்பொழிவு நடைபெற்று வருகிறது.

இந்த கருத்தரங்கத்தின் துவக்க விழாவில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்திரன் பங்கேற்று, நாய்களுக்கான ரத்ததான கைபேசி செயலியை துவக்கிவைத்தார். இந்தியாவில் நாய்களுக்காக ரத்த தானம் செய்வதற்காக முதல் முதலாக துவங்கப்படும் செயலி என்ற பெருமையை, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.

தங்கள் வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகளுக்கு ரத்தம் தேவைப்படும் பட்சத்தில், இந்த செயலியில் பதிவு செய்து இருப்பவர்களை தொடர்புகொண்டு, நாய்களுக்கு ரத்தம் பெறுவது சுலபமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இது போன்று, விலங்குகளை பாதுகாக்க உருவாகும் செயலிகள், செல்லப் பிராணிகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு வரமாகவே உள்ளது.

Exit mobile version