அதிமுக என்ற சொல்லிற்கு இருக்கும் பலம் அளவற்றது என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய அதிமுக எப்படி உருவானது ? 48வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுகவின் சாதனைப் பயணத்தை சற்றே திரும்பி பார்க்கலாம்…
தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ம் தேதி, எம்.ஜி.ஆரால் புதுக்கட்சி தொடங்கப்பட்டது.அந்த கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார் எம்.ஜி.ஆர். புதிய இயக்கத்தின் பெயரையும் , கொடியையும் அறிவித்த அவர், கட்சியின் அமைப்பு செயலாளராக தென்னகம் நாளேட்டின் ஆசிரியரான கே.ஏ.கிருஷ்ணசாமியை நியமித்தார்.
இதைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான இளைஞர்கள் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய போது, அவர் ஏற்கனவே சட்ட மன்ற உறுப்பினராக இருந்ததால், அதிமுகவின் பலம் இன்னும் அதிகரித்தது.
1974 ஆம் ஆண்டு, புதுவையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, அதிமுக ஆட்சி அமைத்து, ஏழை, எளிய மக்களுக்கான அரசாக மாறியது. பின்பு, 1977ம் ஆண்டு புதுவையில் இரண்டாவது முறையாகவும், தமிழகத்தில் முதல் முறையாகவும் அ.இ.அ.தி.முக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. 1980ம் ஆண்டு, தமிழகத்தில் நடைபெற்ற மறு சட்டமன்ற தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க வெற்றிப்பெற்றது.1972 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த சின்னமாக இரட்டை இலை விளங்குகிறது.
1987 ம் ஆண்டு, எம்.ஜி.ஆர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து, கட்சியின் தலைமை பொறுப்பேற்று, பொதுச்செயலாளர் ஆனார் ஜெ. ஜெயலலிதா. 1991ம் ஆண்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் காங்கேயம் தொகுதிகளில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். 1991 ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை தமிழகத்தின் முதல்வராக இருந்தார். பின்பு, 2002 ம் ஆண்டில் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின், 2011ஆம் ஆண்டிலும் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார்.
இவரின் அரசியல் பயணத்தில், பல இன்னல்களை சந்தித்தாலும், மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற வாக்கியத்தை உயிர் மூச்சாகக் கொண்டு மக்களுக்காகவே வாழ்ந்தார் ஜெயலலிதா. உடல் நலக் குறைவால் 2016 ம் ஆண்டு டிசம்பர் 5 ம் தேதி அவர் காலமானார்.ஜெயலலிதாவின் இழப்பு, தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பாக அமைந்தது.
அதன் பின், தமிழக முதலமைச்சராக கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி, எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார். இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளது. குடிமராமத்து திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா 2 ஆயிரம், மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாணவர் நலத்திட்டங்கள் என, எண்ணற்ற மக்கள் நலத்திட்டப் பணிகளை, பல்வேறு துறைகளின் மூலம் தொடர்ந்து செயல்படுத்தி, தமிழகத்தை தொடர்ந்து முன்னேற்றி வருகிறது.
இப்படி, கட்சி தொடங்கிய நாள் முதல், இன்று வரை, மக்களுக்காக செயல்படும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், வெற்றிகரமாக அக்டோபர் 17ம் தேதி 48வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. அதிமுகவின் வெற்றிப் பயணம், ஆண்டாண்டு காலத்திற்கு தொடர்ந்துக் கொண்டே இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
அயராது உழைத்தால், கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டனும், அமைச்சராகவும், முதலமைச்சராகவும் ஆகலாம் என்பதற்கு அதிமுகவே எடுத்துக்காட்டு. அதிமுக, தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, தொண்டர்களால் வழி நடத்தப்படும் கட்சி, இது தொண்டர்களின் கட்சி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.