திருடு போன மொபைல்களைக் கண்டுபிடிக்கும் நவீன தொழில்நுட்பத்தை, மத்தியத் தொலைத் தொடர்புத்துறை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.
மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது செல்போன். அதுபோல், செல்போன் காணாமல் போவதும், திருடுபோவதும் தற்போது அதிகரித்துள்ளது. இதுபற்றிய புகார்கள், காவல்துறைக்கு நாள்தோறும் வந்து குவிகின்றன.
ஆனாலும், காணாமல்போன செல்போன்கள் பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படாமலே போகின்றன. இந்நிலையில், மத்திய தொலைத் தொடர்புத்துறை காணமல் போன செல்போன்களை கண்டறிய, Central Equipment Identity Register என்ற இணையத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதில், திருடு போன அல்லது காணாமல் போன செல்போன் எண், அதன் IMEI நம்பர், தொலைந்த இடம், தேதி, செல்போன் காணாமல் போனது குறித்து காவல்துறையில் அளிக்கப்பட்ட புகார் விபரங்களைப் பதிவேற்றுவதன் மூலம், காணாமல்போன செல்போனை மற்றவர்கள் உபயோகிப்பதை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.
மேலும், அந்த மொபைல் எங்கே உள்ளது என்பதையும் ட்ராக் செய்ய முடியும். டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதி, விரைவில் இந்தியா முழுவதும் பயன்பாட்டுக்கு வரும்.