அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டை தடுக்க முடியாதா என்று ஏங்கிய பெற்றோர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை அறிமுகம் செய்துள்ள ஒரு திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் திருடப்படுவதை தடுக்க RFID என்ற நவீன கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் உள்ள வசதிகளால் ஏழைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் சில நேரங்களில் சமூக விரோதிகள், குழந்தைகளை திருடிச்செல்லும் சம்பவங்களால் பெற்றோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறை பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, குழந்தை திருட்டை தடுக்க சிறப்புத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் கைகளில் சாப்ட்வேர் தொழில் நுட்பத்துடன் கூடிய RFID எனப்படும் Radio Frequency Identification Tag கட்டி விடப்படுகிறது. இந்த டேக் கட்டி கண்காணிக்கும் புதியமுறை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் நடைமுறையில் உள்ளது. இதைத்தொடர்ந்து கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையிலும் இத்திட்டம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் தாய், குழந்தை மற்றும் உதவியாளரின் புகைப்படங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.
மருத்துவமனையில் பிரசவ வார்டின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல்களில் அடையாளப்படுத்தும் கருவியானது பொருத்தப்பட்டிருக்கும். அந்த வாசல் வழியாக குழந்தையுடன் தாய் சென்றால் பச்சை வண்ண விளக்கும், குழந்தையுடன் உதவியாளர் சென்றால் ஆரஞ்சு வண்ண விளக்கு ஒளிரும். 3 வது நபர் யாராவது குழந்தையை தூக்கிச் சென்றால் அடையாளப்படுத்தும் கருவியில் சிவப்பு வண்ண விளக்கு ஒளிருவதுடன், அலாரமும் ஒலித்து குழந்தையை திருடிச் செல்பவரை காட்டிக் கொடுத்துவிடும் என்கிறார் மருத்துவமனை இயக்குனர் சித்ரா.
ஒருவேளை இந்த பாதுகாப்பை மீறி யாராவது குழந்தையை எடுத்துச் சென்றாலும் 10 நிமிடத்தில் ஜிபிஆர்எஸ் கருவி மூலம் கண்டுபிடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த அதிநவீன அடையாளப்படுத்தும் கருவியின் செயல்பாடு தாய்மார்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.