போதையில் தகராறு.. கொலையில் முடிந்தது..

இரண்டு நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து அமர்ந்து மது அருந்தியிருக்காங்க, அதுல ஒரு நபர் மற்றோரு நபரை பற்றி ரொம்பவே ஆபாசமா பேசியிருக்காரு, இதுல ஆத்திரமடைந்த மற்றோரு நபர் என்ன செய்தார் தெரியுமா? பாருங்க..

சென்னை புழல் பகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சட்டைப் பையில் இருந்த செல்போன் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்தவர் லட்சுமிபுரம் வெங்கடேஸ்வரா நகர் 3வது தெரு சேர்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது.

இறந்தவரின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால், சந்தேகமடைந்த போலீஸார், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அன்பழகனை எட்டி உதைத்து கல்லால் தலையில் தாக்கிய காட்சிகள் பதிவாகி இருந்தன..

சிசிடிவியில் பதிவான நபர்களை அடையாளம் கண்ட போலீசார், அவர் லட்சுமிபுரம் அசோகா தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பதை கண்டறிந்தனர்.

அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கடந்த 8ம் தேதி அன்பழகனும், கிருஷ்ணமூர்த்தியும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியதும், போதை தலைக்கேறியதால், அன்பழகன், கிருஷ்ணமூர்த்தியை ஆபாச வார்த்தையால் திட்டியதும் தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வந்து போதையில் இருந்த அன்பழகனை தாக்கியதாகவும், போதையில் இருந்ததால்அன்பழகன் தரையில் விழுந்ததாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். போதை உச்சிக்கு ஏறிய நிலையில், கல்லால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அன்பழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகவும் கிருஷ்ணமூர்த்தி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். கொலை சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Exit mobile version