மிரட்டும் கொரோனா வைரஸ் -பீதியில் சீன மக்கள்

சீனாவில் பரவி வரும் மர்ம காய்ச்சலுக்கு இது வரை 4 பேர் பலியாகியுள்ளனர் .

2003 ஆம் ஆண்டு சீனாவை அச்சுறுத்தியது சார்ஸ் நோய். இந்த நோய் சுவாச மண்டலத்தைத் தாக்கும் தன்மையுடையது. சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 37 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சார்ஸ் நோயால் 8 ஆயிரத்து 98 பேர் பாதிக்கப்பட்டனர். 774 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே வகையான வைரஸ் சீனாவில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸ், நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் கிருமிகள் காற்றில் பரவும் தன்மை கொண்டதால், ஒரே நேரத்தில் பலருக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

ஒரு மனிதரிடமிருந்து மற்றவருக்கும் பரவும் தன்மை கொண்டது.விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். லண்டன் இம்பீரியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் சர்வதேச தொற்றுநோய்கள் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 1 ஆயிரத்து 723 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இது வரை 4 பேர் பலியாகியுள்ளனர். வுகான் நகரில் 170 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் நிலமை கவலைகிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீனாவிலிருந்து ஜப்பானுக்கும், தாய்லாந்துக்கும் சென்ற இருவருக்கு இதே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் அந்தந்த நாடுகளில் சிகிச்சையளிக்கப்பகிறது. சீனாவிலிருந்து சர்வதேச விமானங்களில் பயணிப்பவர்களால் இந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதால், அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சீன நாட்டின் முக்கியக் கொண்டாட்டங்களில் ஒன்றான புத்தாண்டு இன்னும் சில தினங்களில் வரவுள்ளதால், 44 கோடி பேர் ரயில்கள் மூலமும் 7கோடியே 9 லட்சம் பேர் விமானங்களின் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கும், வேறு நாடுகளுக்கும் பயணிப்பார்கள். இதனால் இந்த நோயின் தாக்கம் மேலும் பரவலாம் என்று அந்நாட்டு அரசு அச்சம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் என்பது பெரிய வைரஸ் குடும்பம், இதில் மனிதர்களை பாதிக்க கூடிய வைரஸ் 6 வகை இருந்தன. தற்போது இந்த மர்ம வைரஸ் 7வது வகையாக இருக்ககூடும் என்று கருதப்படுகிறது.  உலக நாடுகள் அனைத்தும், கோரோனா வைரஸ் பரவலை கவனமாக உற்று நோக்குகின்றது. இந்த நிலையில், சீனாவிற்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், கொரான வைரஸால் அந்நாட்டு மக்களிடையே பதட்டத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..

Exit mobile version