அதிமுக சார்பில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18 ம் தேதி, மக்களவை தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இதையடுத்து சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது. கடந்த 11 ம்தேதி விருப்ப மனு அளித்தவர்கள் இன்று காலையிலேயே அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் அளித்தவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்தினர். வேட்பாளர் நேர்காணல் முடிவடைந்ததையடுத்து விரைவில் 18 தொகுதிகளுக்கும் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள்.