தருமபுரி மாவட்டம் அம்மா மினி கிளினிக்குகளில் பணிபுரிய நடைபெற்ற நேர்காணலில் குளறுபடி ஏற்பட்டதால், மருத்துவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டன. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 45 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்ற, அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். 120 பேர் விண்ணப்பித்த நிலையில், 45 பணியிடங்களுக்கு நேர்காணல் நடைபெற்றது. நேர்காணலில் 30 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 15 பணியிடங்களுக்கு தவறுதலாக அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் சென்றனர்.