வலைத்தளம் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை ஒழுங்குமுறை படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக, மத்திய மருந்துகள் கண்காணிப்பு இந்திய ஜெனரல் ஈஸ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை, போரூர் அருகே உள்ள ராமசந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 29 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா, மருத்துவ கல்லூரி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய மருந்துகள் கண்காணிப்பு இந்திய ஜெனரல் ஈஸ்வர ரெட்டி, அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய ஈஸ்வர ரெட்டி, மருந்துகள் கண்காணிப்பு திட்டத்தின்கீழ் நாட்டில் தயாரிக்கப்படும் பல்வேறு ஆன்டிபயாடிக் மருந்துகளின் பாதுகாப்பு தகவல்கள், மருந்து தயாரிப்பாளர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதுபோன்று மருத்துவ கல்லூரிகளின் ஒழுங்குமுறை விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வலைத்தளம் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை ஒழுங்குமுறைபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதன் பின்னர், முனைவர் பட்டம், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பிசியோதெரப்பி உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஈஸ்வர ரெட்டி பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதில் 22 பேருக்கு சிறப்பு தங்க பதக்கங்களையும், 452 பேருக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மகன் விவேக்கிற்கு, டாக்டர் பட்டத்தை ஈஸ்வர ரெட்டி வழங்கி கவுரவித்தார்.