நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்!

சர்வதேச மகளிர் தினமான இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முதல் பெண்மணிகள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…

இந்தியாவிலேயே போர் விமானங்களை இயக்கிய முதல் பெண் என்ற சாதனையை படைத்தவர் மகாராஷ்டிராவை சேர்ந்த அவனி சதுர்வேதி! குஜராத் மாநிலம் ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் கடந்த 2018-ம் ஆண்டு எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானத்தை தனியாக ஓட்டிச் சென்றதன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்தார்.

IAAF உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்! அசாமில் பிறந்த அவர், 2018-ம் ஆண்டு தனது 20 வது வயதில், பின்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்சிப், 400 மீட்டர் பெண்கள் இறுதி போட்டியில் 51.46 விநாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

கேரளாவை சேர்ந்த 21 வயது பெண்ணான ஆர்யா ராஜேந்திரன்! இந்தியாவின் இளம் வயது பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்! கடந்தாண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மேயருக்கான தேர்தலில் களம் கண்ட கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன, 100 உறுப்பினர்களைக் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் 54 வாக்குகளை பெற்று மேயராக பதவியேற்றார்.

கிரிக்கெட் விளையாட்டுகளில் ஆண்கள் மட்டுமே நடுவராக செயல்படுவர்… இதனை மாற்றும் விதமாக ஐசிசியின் முதல் பெண் நடுவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி! உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமே நடுவராக பணியாற்றி வந்த லட்சுமியை கடந்த 2018-ம் ஆண்டு சர்வதேச நடுவர்கள் குழுவில் சேர்த்தது ஐசிசி.

பொதுவாக கடல் பயணம் என்றாலே பெண்களுக்கு ஒருவித உற்சாகம் மட்டுமே இருந்து வந்தது. அந்த கடலில் கப்பலை தானாகவே ஓட்டி சென்றால் என்ன? என்ற எண்ண விதையால், இன்று விருட்சமாக நிற்கிறார் இந்தியாவின் முதல் கப்பல் பைலட் ரேஷ்மா நிலோபர்! சென்னையை சேர்ந்த ரேஷ்மா, கடல் சார் தொழிற்நுட்பத்துறையில், ஆறரை ஆண்டுகள் படித்து, பயிற்சிப் பெற்று கடல் மாலுமியாக பணியை துவங்கினார்..

பெருங்கடலின் சிறுதுளி தான் இந்த பட்டியல்.. இன்னும் சொல்லப்படாத சாதனையாளர்கள் அனைவருக்கும் சேர்த்து மகளிர் தின வாழ்த்துகளை கூறி மகிழ்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி!

 

Exit mobile version