கார் ஓட்டும் பெண்களை கண்ணிமைக்காமல் பார்க்கும் தேசத்தில், பேருந்தை இயக்கி பெண் ஒருவர் கெத்து காட்டி வருகிறார். யார் அவர்… பார்க்கலாம்
சீனித்தாய். துணிவு இவரது பிறவி குணம். காக்கி உடை இவரது கவச குண்டலம். தந்தை லாரி ஓட்டுநர் என்பதால் ஸ்டேரிங்கும், இன்ஜினும் சிறு வயதிலேயே சீனித்தாய்க்கு தண்ணீர் பட்ட பாடு.
தென்காசி மாவட்டம் ஊமைத்தலைவன் பட்டியை சேர்ந்த இவர், 19 வயதில் கனரக வாகனம் இயக்கும் உரிமம் பெற்று, 14 ஆண்டுகளாக பேருந்து ஓட்டுநராக பணி புரிந்து வருகிறார்.
இன்ஜின் சூட்டில் வேலை செய்வதற்கு, ஆண்களே அலுத்து கொள்ளும் நிலையில், சீனித்தாய் சிரித்த முகத்தோடு ஸ்டேரிங் முன் அமர்ந்து வலம் வருகிறார்.
பிற பெண்களை போல் குடும்ப சூழல், பணப் பற்றாக்குறை என்ற பிண்ணனி எல்லாம் இவரிடம் இல்லை. பிடித்தே பேருந்துக்கு வாழ்க்கை பட்டேன் என்கிறார் இந்த இயந்திர மனிதி.
ஏசி அறையில் பணியாற்றும் பெண்களுக்கே எண்ணற்ற இடர்பாடுகள் ஏற்படும் போது, சாலையில் வலம் வரும் இந்த சாதனை மங்கையை எந்த அளவிற்கு இன்னல்கள் துரத்தியிருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை.
ஆனால் அவர் அயற்சி அடையவில்லை, முயற்சியை கைவிடவில்லை. உழைப்பு எனும் எரிபொருளை வாழ்க்கை எனும் வண்டியில் நிரப்பிக் கொண்டே இருந்தார். விளைவு சொந்தமாக மினி வேன் வாங்கி சிறகடித்து பறக்கிறது இந்த சாகச பறவை.
ஆண்கள் உலகில், வெற்றி பெற்ற பெண்களை மட்டுமே கவனிக்கப்படுவார்கள். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அவர்களின் போராட்டங்கள் சாய்ஸில் விடப்படும்
ஆனால் வெற்றி பெற்ற பெண்களை போற்றுவதை விட அவர்களின் போராட்டங்களை அங்கீரிப்பதே சமத்துவம் மலருவதற்கான முன்னெடுப்பு. சீனித்தாய்களை போராடும் போதே அங்கரீப்போம்.
இனிய மகளிர் தின வாழ்த்துகள்.