ஆட்டோ என்பது இன்று அத்தியாவசியமான போக்குவரத்து சாதனமாக உள்ளது.. திண்டுக்கல்லில் 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநராக வலம் வரும் பெண் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
சென்னை போன்ற பெருநகரங்களில், ஆட்டோ ஓட்டும் பெண்களை ஆங்காங்கே நாம் பார்க்க முடியும். ஆனாலும், சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் இன்றளவும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் சூழல் உள்ளது… ஆனால் திண்டுக்கல்லை சேர்ந்த லட்சுமி பிரியா அதை மாற்றிக் காட்டியுள்ளார்!
குடும்ப சூழல் காரணமாக, வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்ட நிலையில், சகோதரியின் ஆலோசனைப்படி, ஆட்டோ ஓட்டும் தொழிலை கையில் எடுத்தார் லட்சுமி பிரியா.
உதாசினம், அலட்சியம், அவமானம் இவற்றை கடந்து தான் சாதனையாளர்கள் உருவாகின்றனர், லட்சுமி பிரியாவும் அதற்கு விதிவிலக்கல்ல, ஆரம்ப காலகட்டத்தில், பல அவமானங்களை சந்தித்த அவர், தன்னம்பிக்கையை இழக்காமல், தனக்கான பாதையை உருவாக்கினார்!
உதாசினங்களை புறம் தள்ளி, ஏளனப் பேச்சுகளை படிக்கட்டுகளாக மாற்றி, தொடர்ந்து தனது உழைப்பை மட்டுமே நம்பி தொழிலை ஆரம்பித்த லட்சுமி பிரியா, வெற்றிகரமாக 12 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டுநராக வலம் வருகிறார்.
ஆரம்பத்தில் இவரது ஆட்டோவில் ஏறத் தயங்கிய பெண்கள், தற்போது இவருக்காக காத்திருந்து பயணம் செய்து வருகின்றனர்…
உழைப்பதற்கு பாலினம் பொருட்டல்ல எனக் கூறும் லட்சுமி பிரியா, பெண்கள் ஏதாவது ஒரு துறையில் தங்களது முத்திரையை கட்டாயம் பதிக்க வேண்டும் என்கிறார்.