சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம் இன்று

சர்வதேச சிட்டுக் குருவிகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அழிவின் பாதையில் உள்ளதாக கூறப்படும் சின்னஞ்சிறு பறவையைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது பார்ப்போம்..

நகரங்களில், சிட்டுக் குருவிகளின் கீச் கீச் ஓசையுடன் தங்களின் காலை பொழுதை மனிதர்கள் தொடங்கிய காலம் ஒன்று இருந்தது. கேட்க கேட்க சலிக்காத, ஓசை சிட்டுக்குருவியினுடையது. சுறுசுறுப்பாக இயங்கிகொண்டே இருக்கும் சிட்டுக்குருவிகள் யவருக்கும் புத்துணர்ச்சியை தரும்.

சிட்டுக் குருவிக்கும் தமிழ் திரைப் பாடல்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. கட்டுப்பாடுகள் இல்லாமல் தன் போக்கில் வாழும் சிட்டுக்குருவிகளை போல் வாழ ஆசைப்படாத மனிதர்களும் உண்டோ…

கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் சுற்றித்திரிந்தாலும் வீட்டின் மூலைகள், உத்திரம், வாயிற்கதவு, தோட்டங்கள் என ஆங்காங்கு கூடு கட்டி மனிதர்களுடன் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வாழ்ந்தவைகள்தாம் சிட்டுக்குருவிகள்.

நகரமயமாக்கல், வாகனங்கள், செல்போன்கோபுரங்களின் பெருக்கம் போன்றவற்றால் தற்போது சிட்டுக்குருவிகள் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளன. நகரங்களில் மரங்கள் அதிகளவில் வெட்டப்படுவதும் சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. சிறு சிறு பூச்சிகள், தாணியங்கள் போன்ற தனக்கு தேவையான இரை கிடைக்காமல், நகரங்களை விட்டு வெளியேறி எங்கோ கண்காணாத இடங்களை நோக்கி அவை இடம் பெயர்ந்து போயின.

தற்போது கிராமங்களில் மட்டும், அதுவும் குறைந்த அளவே காணப்படும் உயிரினமாக சிட்டுக்குருவிகள் சுருங்கியுள்ளன. அழிவின் விளிப்பில் உள்ள சிட்டுக் குருவிகளை காப்பது என்பது நம் முன் இருக்கும் மிகப்பெரிய கடமை. சிறிய வீடாக இருந்தாலும் தோட்டம் அமைக்க வேண்டும் வீட்டு மொட்டை மாடியில் அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் வைப்பது, தானியங்களை தூவுவது, மண் பானையில் வைக்கோல் நிரப்பு வீடுகளின் முற்றத்தில் வைப்பது போன்றவை மூலம் சிட்டுக்குருவிகளை மீண்டும் நகரம் நோக்கி நகர வைக்கலாம்.

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல என்பதை உணர்ந்து செயல்பட்டாலே அழிவின் விளிம்பில் உள்ள பல உயிரினங்களை நாம் காப்பாற்றி விடலாம்

Exit mobile version