இன்று சர்வதேச மலைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், மலைகளின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை பாதுகாக்க வேண்டியது அவசியம்
கரியமில வாயுவின் சதவிகிதம் வளிமண்டலத்தில் அதிகரித்து, அதனால் ஏற்படும் பின் விளைவுகளை கருத்தில் கொண்டு, 2002ஆம் ஆண்டை சர்வதேச மலைகள் ஆண்டாக ஐநா சபைஅறிவித்தது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11-ஆம் நாள் சர்வதேச மலைகள் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய, நேபாள எல்லையில் 8 ஆயிரத்து 848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்ட் உலகளவில் உயர்ந்த சிகரமாகும். அதே போல், இந்தியாவின் இமயமலைத் தொடரில் உள்ள காட்வின் ஆஸ்டின் சிகரம், 8 ஆயிரத்து 611 மீட்டர் உயரம் கொண்டது. இவை இரண்டுமே இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரமாக கேரளாவில், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள ஆனைமுடியும், தமிழ்நாட்டில் நீலகிரி மலைத்தொடரில் தொட்டபெட்டா சிகரமும் அமைந்துள்ளன.
உலகின் 20 சதவீத சுற்றுலா வருவாய், மலைகளை நம்பியே உள்ளது. இதனால், சர்வதேச அளவில், வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில், மலைகள் மற்றும் மலை சார்ந்த வனங்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
உலக நிலப்பரப்பில், 27 சதவீதம் மலைகளே உள்ளன. தண்ணீர், உணவு, சுத்தமான காற்று என, அனைத்தும் நமக்கு கிடைக்க மலைகள் மற்றும் அதில் உள்ள வனப்பகுதிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விவசாயத்திற்கு மழை எப்படி முக்கியமானதோ, அதனைப் போன்றே மழைக்கு, மலைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மலைகளில் உள்ள தாவரங்கள் அழிக்கப்படுவதையும், கற்களுக்காக மலைகள் வெட்டி எடுக்கப்படுவதையும் தவிர்ப்பதே, எதிர்வரும் தலைமுறையினரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு செய்யும் பேருதவி என்பதில் ஐயமில்லை.