டிஜிட்டல் ஊடகங்களை மத்திய அரசு கண்காணிக்க வகை செய்யும், புதிய தகவல் தொழில்நுட்ப விதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ஐ மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த விதிகளை செல்லாது என அறிவிக்க கோரி, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா மற்றும் டிஜிட்டல் நியூஸ் பப்ளிஷர்ஸ் அசோசியேஷன் உள்ளிட்டோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கண்காணிப்பு நடைமுறை மூலம், ஊடகங்களை மத்திய அரசு கட்டுப்படுத்துவது, ஊடகங்களின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என தெரிவித்தனர். இதை தொடர்ந்து, டிஜிட்டல் ஊடகங்களை கண்காணிக்கும் உட்பரிவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.