சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்ட 324 இந்தியர்களுக்கு தீவிர மருத்துவ பரிசோதனை

சீனாவிலிருந்து, முதல் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 324 பேர், சிறப்பு மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் சீனாவிலிருந்து, இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. ஹுபெய் மாகாணத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்துவர, ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானம் சீனாவுக்கு சென்றது. அந்த விமானத்தில், 5 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவும் சென்றது.  உகான் நகரில் இருந்து முதல் கட்டமாக 324 இந்தியர்கள், இந்த விமானத்தின் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர்.

டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவர்கள், தனி பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை சார்பில் டெல்லி சாவ்லா நகரில் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியா வந்துள்ள 324 பேருக்கும் இந்த மருத்துவ முகாமில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, எஞ்சியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மேலும் ஒரு சிறப்பு விமானத்தை, இந்தியா இன்று சீனாவுக்கு அனுப்பவுள்ளதாக ஏர் இந்தியா விமான நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version