கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்திய விஞ்ஞானிகள் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கொரோனா பரிசோதனை மையங்களின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய மோடி, இந்த ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனைக்காக மட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் எதிர்காலத்தில் இவை ஹெச்.ஐ.வி., டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை மையங்களாக விரிவாக்கம் செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், கொரோனாவை எதிர்த்து கோடிக்கணக்கான இந்தியர்கள் மிக துணிச்சலுடன் போராடி வருவதாக தெரிவித்த அவர், பிற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார். வரும் மாதங்களில் பல பண்டிகைகள் வரவுள்ளது குறித்து பேசிய மோடி, இந்த பண்டிகை கொண்டாட்டங்களின்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், தொற்றுநோய் பிறருக்கு பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.