நிபா வைரஸ் குறித்து, நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி சார்பில் கொசு மருந்து அடித்தும், நிலவேம்பு கசாயம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கு தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் கேரளாவிலிருந்து வந்து செல்கின்றனர். கேரளாவில் தற்போது நிபா வைரஸ் பரவி வருவதால் கேரளாவிலிருந்து ஒட்டன்சத்திரம் வரும் வியாபாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மருத்துவ சோதனை செய்யவும், பொதுமக்களிடையே நிபா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமெனவும் கடந்த 18ஆம் தேதியன்று நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகள், காய்கறி சந்தை, பேருந்து நிலையம், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் கொசு மருந்து அடித்தும், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கியதுடன், நிபா வைரஸ் குறித்த துண்டு பிரசுரம் வழங்கியும் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.