மேற்குவங்கம் மற்றும் வங்கதேசத்தில் புத்த பூர்ணிமா தினத்தன்று தற்கொலை படை தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 21ம் தேதி நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இலங்கை தாக்குதல் குறித்து அந்நாட்டு அரசுக்கு உளவுத்துறை முன்னதாக எச்சரிக்கை விடுத்தபோதிலும், அதை அலட்சியம் செய்த காரணத்தால், அங்கு தாக்குதலை தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், வங்கதேசம் மற்றும் மேற்குவங்கத்தில் புத்த பூர்ணிமா தினத்தன்று ஜமாத் உல் முஜாகிதீன் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் தற்கொலை படைத் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அங்குள்ள இந்து மற்றும் புத்த கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை போல கவனக்குறைவாக இல்லாமல், தாங்கள் உச்சகட்ட உஷார்நிலையில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.