குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் முக்கிய நகரங்களில் தீவிரவாத வேலைகளில் ஈடுபடுவதற்காக, 300 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, அனைத்து மாநில அரசுகளுக்கும் முன்னெச்சரிக்கை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது. வரும் 26ம் தேதி குடியரசு தினத்திற்கு முன்னதாக, நாட்டின் முக்கிய நகரங்களில், காவல்துறையினர் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என, மத்திய உள்துறை அமைச்சகம் ஒர் உயர் மட்ட எச்சரிக்கை அறிக்கையை, அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. அந்த அறிக்கையில், பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் உட்பட, 300 தீவிரவாதிகள் ஜம்மு – காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்குகளில் பதுங்கி இருப்பதாக, தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ யின் உதவியோடு, இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்கன் தாலிபன்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.