அவமானப்படுத்தினார்கள்; புறக்கணித்தார்கள் – உண்மையை உடைத்த பாகிஸ்தான் வீரர் அமீர்!

 28 வயதே ஆன பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் தனது ஓய்வை கடந்த வாரம் அறிவித்தார். அணியின் பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரியம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அமீர் தனது ஓய்வை அறிவித்தது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்..

2009 ஆம் ஆண்டு 17 வயதில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்சை தொடங்கினார் அமீர். தனது முதல் ஆட்டத்தில் 19 ஓவர் வீசியவர், 3 ஓவர் மெய்டன் செய்து மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு அவர், ஆடிய ஆட்டங்கள் வெறிதனம். ஒரே ஆண்டில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பினார்.தனது அபாரமான ஸ்விங் திறமையாலும், யார்க்கர்களினாலும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய புகழை அடைந்தார் அமீர்.

 

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இவர் வீசிய முதல் ஓவரிலேயே ஓப்பனர் தில்ஷனின் விக்கெட்டை எடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதே ஆண்டு நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட்டிலும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்தார். அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 15 ஆண்டு கழித்து அஸ்திரேலியாவை பாகிஸ்தான் வீழ்த்திய போட்டி இது.

தனது 18 ஆம் வயதில் மேட்ஸ் ஃபிக்சிங்கில் சிக்கி சறுக்கினார். அவரது குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 5 வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதற்காக மூன்று மாதம் ஜெயில் தண்டனையும் அனுபவித்தார் அமீர். தண்டனை காலம் முடியும் சில மாதம் முன்பே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவரை அணியில் சேர்த்துக் கொண்டது. பின்பு 2015 ஆம் ஆண்டில் திரும்பி வந்து விக்கெட் வேட்டையை தொடர்ந்தார்.

கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த அமீர் ஒரு நாள், டி-20 போட்டியில் விளையாடுவேன் என கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த வாரம் அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்தார். அதில், அவரால் விளையாட்டை தொடர முடியாமல் போனதுக்கு பாகிஸ்தான் அணி நிர்வாகம் கொடுத்த மன அழுத்தம் தான் காரணம் என்று கூறியிருந்தார்.

இலங்கையில் இருந்து ஒய்வை அறிவித்த அவர் பாகிஸ்தான் சென்றதும் ஓய்வின் பிண்ணனி காரணத்தை வீடியோவில் வெளியிடுகிறேன் என கூறியிருந்தார். அதேபோல் வீடியோ வெளியிட்டவர், “ பாகிஸ்தான் அணியின் தலைமை பயற்சியாளர் மிஸ்பா உல் ஹக், பந்துவீச்சுப் பயற்சியாளர் வக்கார் யூனுஸ் இருவரும் தான் என் மீது அவப்பெயர் எற்படுக் காரணம் என தெரிவித்துள்ளார்”.

பணம் சம்பாதிப்பதற்காக டி20 போட்டிகளில் மட்டுமே விளையாட விரும்புவதாகக் கூறி மக்கள் மனதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலும் மெதுவாக விஷம் எற்றுவது போல் ஏற்றி எனக்கு அவப்பெயர் எற்படுத்தினார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். நான் செய்த மேட்ச் ஃபிக்சிங்காக தண்டனை பெற்றதாகவும் மிகவும் அசிங்கம் பட்டதாகவும் தெரிவித்தார். அதில் இருந்து வெளியே வர மிகவும் சிரமம் பட்டதாகவும் தெரிவித்த அவர், அவர்கள் என் பெயரை கெடுக்க கட்டமைத்தார்கள், இனியும் அமைதியாக இருக்க கூடாது நேரம் வந்துவிட்டதாகவும், அதனால் இந்த கடினமான முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையை எழுப்பவும், என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவும் தான் இந்த கடினமான முடிவை எடுத்தாக கூறினார்.

ஜிம்பாபே, நியூசிலாந்து என பாகிஸ்தான் அணியின் விளையாட சென்ற போட்டிகளிலெல்லாம் தொடர் புறக்கணிப்பை சந்தித்தார்.

“மூத்த வீரர் என்ற அடிப்படையில் அணி நிர்வாகமோ, பயற்சியாளரோ என்னை புறக்கணித்த காரணத்தை ஒரு போதும் கூறவில்லை. அதுவும் நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியின் பட்டியலில் கூட வராதது என்னை மிகவும் காயப்படுத்தியது.

பாகிஸ்தான் சூப்பர் லீக், ஆசிய கோப்பை மற்றும் 2017 சாம்பியன் டிராபி ஆகியவற்றில் தனது பங்களிப்பை சிறப்பாக ஆற்றினேன். 2019 உலக கோப்பையில் தோள்பட்டையில் காயம் இருந்தபோதிலும் அதிக விக்கெட் வீழ்த்தினேன். பாகிஸ்தான் அரை இறுதிக்கு வராத போதிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் இருந்தேன்.

நான் இப்போது பாகிஸ்தானுக்காக விளையாடுவதற்கு பதிலாக லீக்கில் விளையாடுவதை விரும்புகிறேன். நீங்கள் தேசிய அணியில் தேர்வு செய்யப்படாதபோது, லீக்கில் சென்று விளையாடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?. எனக்கு என் சுய மரியாதை இருக்கிறது, அதில் நான் சமரசம் செய்ய முடியாது. மரியாதை கொடுப்பதில், மரியாதை பெறுவதில் நான் நம்புகிறேன் ”என்று அமீர் தெரிவித்துள்ளார்.

 

ஷாகித் அஃப்ரிடி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் முன்னாள் தலைவர் நாஜம் சேதி மட்டும்தான் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் சொல்லியிருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தலைமை பயற்சியாளர், பந்துவீச்சுப் பயற்சியாளர், சகவீரர்கள் என அனைவரும் தந்த அவமானமும் மன அழுத்தமும் என்னை இந்த முடிவு நோக்கி சென்றதாகத் தெரிவித்துள்ளார்.

ஷோயப் அக்தர், ரமிஸ் ராஜா, இன்சமாம், அஃப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் அமீருக்கு அதரவு நீட்டி வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சிறுவயதில் ஓய்வு பெறுவது நல்லதில்லை என்றும் ஆலோசனை வழங்கி அவரது முடிவை திரும்பப் பெற செய்து ஆட வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

 

 

 

Exit mobile version