சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமின் பக்கத்தில், விளம்பரதாரர்களின் பதிவுகளை வெளியிடுவதன் மூலமும் பிரபலங்கள் பணம் குவிக்கத் தொடங்கி உள்ளனர். இப்படியாக இன்ஸ்டிராகிராம் பதிவுகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் தற்போது இடம் பிடித்து உள்ளார். இது குறித்து இந்த சிரப்புத் தொகுப்பில் பார்ப்போம்…
முகநூல், டுவிட்டர் போலவே இன்ஸ்டிராகிராமும் ஒரு பிரபலமான சமூகவலைத்தளம். இதில் பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை நல்ல தரத்தில் பதிவேற்ற முடியும். இதனால் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் மற்றும் அவர்களின் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் தளமாக உள்ளது. இதில் திரைப்படம், விளையாட்டு, அரசியல் – போன்ற பல துறைகளையும் சேர்ந்த பிரபலங்கள் உள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ள பிரபலங்கள், தங்கள் பக்கங்களில் விளம்பரதாரர்களின் தகவல்களை வெளியிட பணம் பெறுவது வழக்கம். அப்படியாக அதிகப் பணம் பெறும் உலகளாவிய விளையாட்டுவீரர்களின் பட்டியல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. அந்தப் பட்டியலில் கிரிக்கெட் வீரராக இடம்பெற்றிருக்கும் தனியொருவன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மட்டும்தான்.
இன்ஸ்டாகிராமில் 38 கோடி பேரால் பின்தொடரப்படும் விராட் கோலி, தனது அதிகாரபூர்வ பக்கத்தில் விளம்பரதாரரின் ஒரு பதிவை வெளியிட 1 லட்சத்து 96 ஆயிரம் டாலர்களை வசூலிக்கிறார். இது இதிய மதிப்பில் சுமார் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் ஆகும்.
கால்பந்து வீரர்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ள இந்தப் பட்டியலில் பிரபல கால்பந்து வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், மெஸ்ஸி – ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்று உள்ளனர். இதில் ரொனால்டோ ஒரு பதிவுக்கு வசூலிக்கும் தொகை 9 லட்சத்து 75 ஆயிரம் டாலர்கள் ஆகும், அதாவது 6 கோடியே 72 லட்சம் ரூபாய்!.
விளையாட்டு வீரர்கள் விளம்பரங்கள் சம்பாதித்துக் குவிப்பது அவர்களின் விளையாட்டு வருமானத்தைவிட பல மடங்கு அதிகம் என்பது நாம் அறிந்ததுதான். இப்போது இதுபோன்ற சமூக வலைத்தள வருமானங்கள் அவர்களுக்கு கூடுதல் பரிசாக உள்ளன.