புதுமை செய்வோம் என்ற திட்டத்தில் அசத்தி வரும் நுண்ணறிவு பிரிவு போலீசார்

புதுமை செய்வோம் என்ற திட்டத்தில் நுண்ணறிவு பிரிவு போலீசார் அசத்தி வருகின்றனர்.

தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்தும், மாணவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வரும் காவலர்களுக்கு பாராட்டு குவிகிறது..!

சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுறுத்தலின்பேரில், புதுமை செய்வோம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் போலீசார் இடையே நல்லுறவு ஏற்பட வழி வகை செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவர்களில் தேசத் தலைவர்களின் படம், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விளக்கப்படம், மாணவர்களுக்கான உறுதிமொழி வாசகங்கள், பெண் குழந்தைகளுக்கான அவசர எண் மற்றும் பல்வேறு அறிவுரை வாசகங்கள் போலீசாரால் வரையப்பட்டுள்ளது.

நுண்ணறிவு பிரிவு போலீசார் மதுசூதனன் மற்றும் காமராஜ் இருவரின் முயற்சியில் முதலில் குன்றத்தூர் அரசு பள்ளியில் ஓவியம் வரையப்பட்டது. இது, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே வரவேற்பை பெற்றது. பின்னர் பள்ளிக்கரணை, தாம்பரம் என தற்போது திருநீர்மலை அரசு பள்ளியில் வரையப்பட்டு வருகிறது.

சுவர்களில் ஓவியம் வரைவது மட்டுமல்லாமல், மாணவ, மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிப்பது மற்றும் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவைகளும் செய்து வருகின்றனர். சென்னை மாநகர் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் வரைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு, தற்காப்பு ஆகியவை கற்று கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. போலீசாரை கண்டாலே அச்சம் கொள்ளும்சூழலை மாற்றி நட்பு ரீதியாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தும் முயற்சி வரவேற்கத்தது..

Exit mobile version