புகை பிடிக்கும் போது, ஒரு மனிதனின் நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளை, புகைப்பழக்கத்தைக் கைவிட்ட பின்னர் நுரையீரலில் உள்ள செல்களே சரி செய்து கொள்ளும் அதிசயம் சமீபத்திய ஆய்வொன்றில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அது குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகக் காண்போம்…
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, உலகெங்கும் 110 கோடி மக்கள், புகைபிடிக்கும் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 18 லட்சம் பேர் புகைப்பழக்கத்தால் மரணமடைகின்றனர். ஒரு நபர், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கு உள்ள வாய்ப்பானது, அவரின் புகை பிடிக்கும் பழக்கத்தினால் 30 மடங்குகள் அதிகமாகிறத. இதனால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை கைவிடுவது அவசியம் ஆகும்.
புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், தொடர்ந்து புகைப்பதற்குக் கூறும் காரணம், இதுவரை பல ஆண்டுகளாக புகை பிடித்து வருகிறேன், இனி நிறுத்தி என்ன ஆகப் போகின்றது? – என்பதே. ஆனால் இந்த பதில் மிகத் தவறானது என்று சமீபத்திய ஆய்வொன்று நிரூபித்துள்ளது.
புகை பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிட்ட பின்னர், விரைவில் அவர்களின் நுரையீரலால் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பிவிட முடியும். அதற்கு, நுரையீரலில் உள்ள சில செல்கள் உதவுகின்றன என்று இந்த ஆய்வு நிரூபித்துள்ளது, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பல்வேறு வயதுகளில் உள்ள, புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், புகைபிடிப்பவர்கள், புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டவர்கள் என,16 தனி நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல் பாதிக்கப்படும் போது தப்பிப் பிழைக்கும் சில செல்கள், புகைப் பழக்கத்தை நிறுத்திய பின்னர் மீண்டும் நுரையீரலை சரி செய்கின்றன என்று தெரியவந்துள்ளது. 40 ஆண்டுகால புகைப் பழக்கத்திற்குப் பின்னர், புகைப் பழக்கத்தைக் கைவிட்டவர்களின் நுரையீரலில் கூட, இந்த அதிசயம் மீண்டும் நிகழ்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
புகைப் பழக்கத்தை சில காலம் முன்பு முழுதாகக் கைவிட்டவர்களின் நுரையீரலானது, ஏறத்தாழ புகைக்கும் பழக்கமே இல்லாதவர்களின் நுரையீரலைப் போலவே செயல்படுவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆனால், தொடர்ந்து புகைத்துக் கொண்டே இருக்கும் நபர்களின் நுரையீரல்களில் இது நடப்பது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் உலகின் பிரபல மருத்துவ இதழான நேச்சர் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.