பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதை அடுத்து, பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் சார்ந்த அறிவிப்புகள் அதிகமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்ததற்கு கிராமப்புறங்களில் மக்களின் செலவழிக்கும் திறன் குறைந்தது முக்கிய காரணம் என்பது மத்திய அரசின் கணிப்பாக உள்ளது. எனவே விவசாயிகளுக்கு பயிர் கடன் உதவியை அதிகரித்து அவர்களின் வாங்கும் திறனை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காகவே, விவசாயிகளின் வருவாயை 2 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.