தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் வசதி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு பராமரிப்பு மையங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதம் 5.5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் இலக்கை,10 ஆண்டுகளில் எட்டியதற்காக , பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் அனைவருக்கும் பாராட்டுகள்“ எனத் தெரிவித்தார்.