ஒருநாள் தொடருக்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இந்தியாவிற்கு வந்துள்ளனர். ஏற்கனவே, கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வென்ற இந்திய அணி நேற்று(21.01.2023) நியூசிலாந்து அணியுடன் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய ஃபின் ஆலன் முகமது ஷமியின் பந்துவீச்சில் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த ஹென்றி நிகொல்ஸ், கான்வாய், மிட்சல், கேப்டன் டாம் லதாம் சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்தனர். கிளன் பிலிப்ஸ் 36, ப்ரேஸ்வெல் 22, சாண்டினர் 27 ஆகியோரே குறிப்பிடத்தக்க ரன்களை எடுத்திருந்தனர். 35வது ஓவரின் முடிவில் நியூசிலாந்து அணியினர் மொத்தமாக 108 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியினர் சார்பாக அதிக பட்சமாக முகமது சமி 3 விக்கெட்களையும், ஹர்திக் பாண்டியா, வாசிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனர்கள் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடர்ந்தார்கள். 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா ஹென்றி ஷிப்லே ஓவரில் ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். நிலைத்து நின்று ஆடிய சுப்மன் கில் 40 ரன்களுடனும், இஷான் கிஷான் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆட்ட முடிவில் இந்திய அணி 111 ரன்கள் சேர்த்து 21வது ஓவரின் முதல் பந்திலேயே வெற்றி பெற்றது.
இவ்வெற்றியைத் தொடர்ந்து இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இரண்டில் வெற்றிப்பெற்று தொடரைக் கைப்பற்றியது. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருதினைத் தட்டிச் சென்றார்.