கிரிக்கெட்டுக்கு நேந்துவிட்ட காளை இந்த ஜடேஜா! – இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியும் 5 நாட்கள் முழுமையாக நடைபெறவில்லை. இந்தப் பொட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியிலும் இந்தியா தனது வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வெற்றி பெற்றது. சமீபகாலத்தில் தன் பழைய ஃபார்மிற்கு திரும்பியுள்ள ஜடேஜா இந்தப் போட்டியிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 263 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியிருந்தது. பிறகு களமிறங்கிய இந்திய அணி 262 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் சற்று நன்றாகவே ஆரம்பித்தது. தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவஜாவை 6 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் ஜடேஜா. பொறுமையாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் அஸ்வின் பந்துவீச்சுக்கு வீழ்ந்தார். லபுஷேனை ஜடேஜாவும், ஸ்மித்தை அஸ்வினும் அவுட்டாக்க பின்னர் வந்த மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.
ஜடேஜா 7 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்து ஆஸ்திரேலியாவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா 31 ரன்னில் ரன் அவுட் ஆனார். கேஎல் ராகுல் 1 ரன்னில் லியான் பந்துவீச்சில் நடையை கட்டினார். விராட் கோலி 20 ரன்களில் மர்பி பந்தில் ஸ்டம்பிட் ஆனார். ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்னில் லியான் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். புஜாரா மற்றும் கே.எஸ் பரத் ஜோடி நிலைத்து நின்று இலக்கை எட்டியது. ஆட்ட முடிவில் புஜாரா 31, பரத் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் முடிவில் ஆட்டநாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா தட்டிச்சென்றார்.

Exit mobile version