டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி…உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டிக்கும் தகுதி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கு இடையே நடைபெற்றுக் கொண்டிருந்த நான்காவது மற்றும் இறுதிப் போட்டியானது தற்போது டிராவாகி உள்ளது. இரண்டு தரப்பு கேப்டன்களும் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர். ஆஸ்திரேலியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 480 ரன்கள் அடித்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவும், கேமரூன் க்ரீனும் சிறப்பாக விளையாடி சதம் அடித்திருந்தனர். மேலும் இந்தியா சார்பாக அஸ்வின் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இரண்டு நாட்களுக்கு ஆஸ்திரேலியாவே பேட்டிங் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு களமிறங்கிய இந்திய அணியில் முதல் இன்னிங்சில் சுப்மன் கில் சதம் அடித்து மூன்றாவது நாள் ஆட்டத்தின் போக்கை இந்திய அணி பக்கம் திருப்பியிருந்தார். இந்திய ஜாம்பவான் பேட்ஸ்மேன் விராட் கோலி தன்னுடைய பழைய பார்மை மீட்டெடுத்து நான்காம் நாள் ஆட்டத்தில் தன்னுடைய முத்திரையைப் பதித்தார். இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோலி 186 ரன்கள் அடித்து பெவிலியன் திரும்பினார். இதனால் இந்திய அணியின் ரன் கணக்கு 571 ஆக இருந்தது.  இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் இன்னிங்சை இரண்டு நாட்கள் விளையாடியதால், இன்றைய ஆட்டம் டிராவை நோக்கிதான் செல்லப்போகிறது என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படியே நடந்துள்ளது.

இந்தத் தொடரில் இதுவரைக்கும் ஐந்து நாட்கள் சென்ற போட்டியே இதுதான். மற்ற போட்டிகள் அனைத்தும் மூன்று நாட்கள் தாண்டியதில்லை. நான்கு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றிருந்தன. தற்போது இந்தப் போட்டி டிராவாகி உள்ளது. எனவே எண்ணிக்கையின் அடிப்படையில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.  இந்தப் போட்டியின் ப்ளேயர் ஆஃப் த மேட்சினை விராட் கோலி பெற்றுச் சென்றார். மேலும் இந்த தொடரை வென்றதன் மூலம் இந்தியா உலக கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பைப் பெற்றது. அங்கேயும் எதிரணி ஆஸ்திரேலியாதான்.

Exit mobile version