கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி தமிழகம், அதுவரை சந்தித்திராத ஒரு பேரழிவை சந்தித்தது. இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதன் பின்னர் உருவான சுனாமியும் 2 லட்சத்துக்கும் அதிகமான உயிர்களை காவு வாங்கியது. தமிழகத்தில் மட்டும் 8 ஆயிரம் பேர் சுனாமிக்கு பலியானார்கள். தமிழகத்தை சுனாமி தாக்கி இன்றுடன் 14 ஆண்டுகளாகும் நிலையில், அது பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்…
சுனாமி என்றால் என்னவென்றே தெரியாது நமக்கு. அந்த வார்த்தையே தமிழர்களுக்கு புதிது…
2004 டிசம்பர் 26க்குப் பிறகு சுனாமி என்றால் என்ன என்று தேடாத தமிழர்கள் இருக்க முடியாது…
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அலைகள் தமிழகத்தை தாக்கி பேரழிவை ஏற்படுத்தியது. தமிழக கடற்கரையோரம் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே கரையைக் கடந்த கடல் அலைகள், நகருக்குள் புகுந்தது.
இயற்கை ஏன் இத்தனை கோபம் கொண்டது? என்ன தவறு செய்தான் மனிதன்? பொறுமைக்கு உதாரணமாக காட்டப்படும் பூமித்தாய் ஏன் அதிர்ந்தாள்? யாருக்கும் தெரியாது.
2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம்தேதி காலை இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ரிக்டர் அளவு கோளில் 9 புள்ளி 1 என்ற கணக்கில் பயங்கரமான பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்குள் ஏற்பட்ட பூகம்பத்தால் கடலில் பெரிய அளவிலான பேரலைகள் எழுந்தன. அவை தொடர்ச்சியாக கடற்கரையை நோக்கி வந்தன.இந்த அலைகள் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளில் கடற்கரை பகுதிகளை தாக்கியது.
மக்கள் நினைத்து பார்க்க இயலாத அளவுக்கு அலைகள் மேல் எழும்பின. ஒவ்வொரு நாட்டிலும் சில நிமிடங்கள் நீடித்த இந்த பேரலைகளின் தாண்டவத்தால், இந்திய துணைக் கண்டமே அதிர்ந்தது. உலகின் மோசமான இயற்கை பேரழிவில் இது 6வது இடத்தை பிடித்தது.
இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சுனாமி தாக்கியது. இந்தியாவில் மட்டும் 12 ஆயிரம் பேர் சுனாமிக்கு பலியானார்கள். தமிழகத்தில் 8 ஆயிரம் பேர் ஆழிப்பேரலைக்கு பலியானார்கள். சென்னை மெரினா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் ஆர்ப்பரித்த அலைகளால் இழுத்துச்செல்லப்பட்டன. கடற்கரையில் இருந்து பல கிலோ மீட்டர் தூரம் வரை கடல் நீர் ஊருக்குள் உட்புகுந்தது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை இதேநிலைதான் காணப்பட்டது. சுனாமிக்கு தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது நாகை மாவட்டம் தான்.
குழந்தைகள், முதியவர்கள் என வித்தியாசம் தெரியாத பேரலைகள், அனைவரையும் விழுங்கியது. அள்ளி அள்ளி உணவு கொடுத்த கடல் தாய் அடுத்த வேளை உணவுக்கே கையேந்த வைத்தாள் தன் பிள்ளைகளை.
ஒவ்வொரு ஆண்டும் கடற்கரையோரங்களில் மக்கள் சுனாமி நாளின் தாக்குதலை நினைவு கூர்கிறார்கள். ஆம், டிசம்பர் 26, 2004ஆம் ஆண்டு மறக்க கூடிய நாள் அல்ல.