இந்தோனேசியாவில் தேர்தல் பணிச்சுமையால் 272 ஊழியர்கள் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களில் 272 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில், அந்நாட்டின் அதிபர், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்காக கடந்த 17-ந் தேதியன்று ஒரேநாளில் தேர்தல் நடத்தப்பட்டது. 26 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் 19 கோடி பேர் வாக்களித்தனர். வாக்குப்பதிவின் போது, வாக்கு சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து வாக்கு எண்ணும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கூடுதல் பணிச்சுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்றிரவு வரை 272 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் இரண்டாயிரம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேசியா தேர்தல் ஆணையத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில்கூட கடுமையாக பணியாற்ற வேண்டியிருந்ததால் அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version