விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணிக்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி மயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா ஆகியோரின் அபார ஆட்டத்தால் 502 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 3ம் நாள் ஆட்டத்தில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரும், கேப்டன் டூபிளிசும் நிதானமாக விளையாடினர். அந்த அணி வீரர்கள் டுப்பிளஸிஸ், டீன் எல்கர் மற்றும் டி காக் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்தநிலையில், 8 விக்கெட் இழப்பிற்கு தென்னாப்பிரிக்கா அணி 385 ரன்களை எடுத்தது. இதனிடையே தென்னாப்ரிக்கா 117 ரன்கள் பின் தங்கியநிலையில், 4ம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. அதில், 431 ரன்களுக்கு தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங்கை தொடர்ந்தது. முதல் இன்னிங்சில் மயங்க் அகர்வால் 215 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில், 2வது இன்னிங்சில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். புஜாரா 81 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய ரோகித் ஷர்மா இரண்டாவது இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார். இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் ஷர்மா 127 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 323 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
394 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு 395 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இதனையடுத்து 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த தென் ஆப்ரிக்கா அணியின் எல்கரை ஜடேஜா 2 ரன்களில் வீழ்த்தினார்.