இந்தியாவின் முதல் 10 பெரும் பணக்காரர்கள் யார், அவர்கள் நிறுவனம் மற்றும் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தெரியுமா?
IIFL India Hurun நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்துவரும் முகேஷ் அம்பானி 3.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து 8ஆவது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
இந்துஜா குழுமத்தின் சேர்மனாக உள்ள எஸ்.பி.இந்துஜா 1.86 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த குழுமம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருள் விற்பனை, மின்சாதன பொருள்கள் விற்பனை ஆகியவற்றில் பிரபலமாக உள்ள விப்ரோ நிறுவனத்தின் சேர்மன் அசிம் பிரேம்ஜி 1.17 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 3வது இடத்தை பிடித்துள்ளார்.
இரும்பு உருக்காலைகள் உள்ளிட்ட உலோகத் தொழிற்சாலைகளை நடத்திவரும் ஏர்செலோர் மிட்டல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் சேர்மனான லட்சுமி மிட்டல், 1.07 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரும், குஜராத்தை சேர்ந்தவருமான கவுதம் அதானி 94,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலின் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான உதய் கோடக் 94,100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பட்டியலின் 6வது இடத்தை பிடித்துள்ளார்.
74 வயதான சைரஸ் பூனவல்லா, பூனவல்லா குழுமத்தின் சேர்மனாக இருக்கிறார். 88,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 7வது இடத்தை பிடித்துள்ள இவர், இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர்.
அயர்லாந்து வாழ் இந்தியர் சைரஸ் மிஸ்திரி, முன்னர் டாடா குழுமத்தின் சேர்மனாக இருந்தவர். தற்போது ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் மேலாண் இயக்குநராக இருந்துவருகிறார். இவர், 76,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் வரிசையில் 8 வது இடத்தை பிடித்திருக்கிறார்.
ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் சேர்மனான ஷபூர்ஜி பல்லோன்ஜி மிஸ்திரி, 76,800 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 9வது இடத்தை பிடித்திருக்கிறார். பார்ஸி இனத்தவரான ஷபூர்ஜி, ஐரிஷ் பெண்மணி ஒருவரை மணந்து கடந்த 2003ம் ஆண்டு முதல் ஐரிஷ் குடிமகனாக இருந்து வருகிறார்.
திலிப் சங்வி சன் பார்மாஸ் நிறுவனரும், மேலாண் இயக்குநருமான திலிப் சங்வி 71,500 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தை பிடித்திருக்கிறார்.