கொரோனா மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கும் என இந்திய சுகாதார துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் நெல்லையில் குழந்தைகள் பிரிவில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு மாதத்தில் மூன்றாம் அலை பரவ தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவ பிரிவில், கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 120 படுக்கைகள் உள்ள நிலையில் தற்போது கூடுதலாக 120 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய புதிய படுக்கைகள் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.