இந்தியாவின் தங்கமங்கை டூட்டி சந்த்

ஒருபக்கம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில், உலக அரங்கில் வரலாற்று சாதனை படைத்து மூவர்ணக்கொடிக்கு பெருமை சேர்த்துள்ளார் தடகள வீராங்கனை டூட்டி சந்த்.

இத்தாலியின் நேபிள்ஸ் நகரில் 30வது உலக பல்கலைக்கழக விளையாட்டுத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 11.32 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச தடகள விளையாட்டு வரலாற்றில், 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தங்கம் வெல்லும் முதல் இந்திய பெண் என்ற சாதனையை இதன்மூலம் படைத்துள்ளார் டூட்டி சந்த். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான இவர், கலிங்கா பல்கலைக்கழக மாணவி ஆவார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் பிரிவுகளில் டூட்டி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் பந்தயத்தில் 11.24 விநாடிகளில் இலக்கை அடைந்து தேசிய சாதனை படைத்துள்ள இவர், இந்தியாவின் அதிவேக பெண் என்ற பெருமைக்குரியவர்.

Exit mobile version