2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தின் சார்பில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
நடைபெற்றுவரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, 2024-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்றும், இந்த இலக்கானது சவாலானது, ஆனால் மாநிலங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அடையக் கூடியது என்று கூறினார்.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நீர்வளத்துறை அமைச்சகம் தண்ணீர் விவகாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க உதவும் என கூறினார். மேலும் மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.