ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சி -நேபாள பிரதமர் புகார்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் சில பகுதிகளை இணைத்து புதிய வரைப்படம் வெளியிட்ட நேபாளம் இந்தியாவின் அதிருப்திக்கு ஆளானது. இந்நிலையில், தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா முயற்சிப்பதாக நேபாள பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவுடன் தொடர்ந்து எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான நேபாளமும் அண்மையில் திடீரென எல்லைப் பிரச்னையை கையில் எடுத்தது.

மானசரோவர் யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் தார்சுலாவில் இருந்து, நேபாளத்தை ஒட்டியுள்ள லிபுலேக் பகுதிக்கு 80 கி.மீ. நீளமுள்ள சாலையை இந்திய அரசு கடந்த மாதம் அமைத்தது. ஆனால், இந்த சாலை தங்கள் நாட்டின் எல்லைக்குள் வருவதாக, நேபாள அரசு கண்டனம் தெரிவித்தது.

அத்துடன், இந்திய எல்லையில் உள்ள லிபுலேக், காலாபானி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடம் ஒன்றையும் நேபாள அரசு கடந்த மாதம் வெளியிட்டது. இந்த புதிய வரைபடத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அதனை கண்டுகொள்ளாத நேபாள அரசு, புதிய வரைபடத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதனை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றியது. இதனால் நேபாளம் மீது இந்திய அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.

இந்நிலையில், மதன் பண்டாரி என்ற நேபாள கம்யூனிஸ்ட் தலைவரின் நினைவுக் கூட்டம், காத்மண்டில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, தனது ஆட்சியை கலைக்க இந்தியா முயற்சிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். புதிய வரைபடம் நேபாள நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதை இந்தியா விரும்பவில்லை எனவும், அதன் காரணமாகவே, தனது அரசை கவிழ்க்க இந்தியா முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நேபாள அரசு தனது உரிமையை வலியுறுத்தி சட்டத்திருத்தம் கொண்டு வந்தது இந்தியாவை கலக்கமடைய செய்துள்ளதாகவும், நேபாள பிரதமர் தனது உரையின்போது குறிப்பிட்டார். நேபாள மக்களின் தேசிய உணர்வு அத்தனை பலவீனமானது அல்ல என கூறிய அவர், புதிய வரைப்படத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது குற்றமல்ல எனவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தனது அரசு பெரும்பான்மை பலத்துடன் உள்ளதாகவும், தனது அரசை கவிழ்க்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவும் எனவும் ஷர்மா ஒலி கூறினார். பதவியில் இருந்து, தான் நீக்கப்பட்டால் நேபாளத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க யாரும் முன்வர மாட்டார்கள் என தெரிவித்த ஷர்மா, தனது சுயநலத்திற்காக அல்லாமல், நேபாளத்தின் நலனுக்காக தான் பேசுவதாகவும் குறிப்பிட்டார்.

நேபாள பிரதமர் மீது அந்நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கொரோனா விவகாரத்தை நேபாள பிரதமர் சிறப்பாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அத்துடன் சொந்த கட்சியிலும், அவருக்கு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இவற்றை திசை திருப்பவே, இந்தியா மீது புதிய குற்றச்சாட்டை நேபாள பிரதமர் முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version