சீனாவில் சுவாச பிரச்னையை ஏற்படுத்தும் நச்சுக் கிருமி வேகமாக பரவி வருவதால், அங்கு செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
சீனாவில் ‘கொரனோ வைரஸ்’ என்ற ஒருவகை நச்சுக் கிருமி வேகமாக பரவி வருவதால், அங்குள்ள மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. கடந்த 11ம் தேதி நிலவரப்படி அங்கு ஒருவர் பலியான நிலையில், 41 பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சீனாவுக்கு பயணம் செய்பவர்கள் அங்கு உடல் நலமின்றி இருப்பவர்களுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்க்க வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சீனா சென்று வரும் சுற்றுலாப் பயணிகளால் இந்தியாவிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் மருத்துவ சோதனைகள் நடத்தும்படி மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.