முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை, ஸ்டாலின் கொச்சைப்படுத்துகிறார் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசு, இந்தியர்களுக்கான மனு பரிசீலனை முகப்பு என்ற இணையவழித் திட்டத்தை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர்களிடம் அளிக்க வேண்டிய தங்களது மனுக்களை, குறைகளை, இந்தியாவில் எந்த இடத்தில் இருந்தும் இணையவழி மூலம் பதிவு செய்ய முடியும். மேலும், தங்களது மனுக்களின் நிலையினை இணையவழி மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த இணையதளத்தில் மனு அளிக்க முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களும் மனு அளிக்கும் பொருட்டு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தனி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று சென்னை எழிலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்தன் மூலம், மு.க. ஸ்டாலின் அரசியலில் அரைவேக்காடாக உள்ளது, தெளிவாகத் தெரிவதாக அவர் குற்றம்சாட்டினார்.