உடல் பருமன் அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் 5வது இடம்

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் உடல் பருமானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் உடல் பருமனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமான மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மனிதன் வாழ்க்கையில் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட போதிலும், மிகவும் சோர்வடைவது உடல் பருமனால் மட்டுமே… உடல் பருமனால், இருதய அடைப்பு, சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி போன்ற நோய்கள் நம்மிடம் அழையா விருந்தாளியாக வந்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள்… இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் 5 சதவிகிதத்தினர் இருப்பதாகவும், இதில் தமிழகம் 5வது இடத்தில் இருக்கிறது என்கிறார் எலும்பு மற்றும் மூட்டு பிரிவு மருத்துவர் கிளமென்ட் ஜோசப். அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மரபணு சார்ந்த போக்கு அடிப்படையில் இந்தியாவை சார்ந்த மக்களுக்கு உடல் எடை அதிகமாக உள்ளதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர்.

முறையற்ற உணவு பழக்கம், தீங்கு விளைவிக்க கூடிய திண்பண்டங்களை உட்கொள்வது மற்றும் இரவு நேரத்தில் தூங்காமல் கண் விழித்திருப்பது உள்ளிட்டவை உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கின்றன. நவநாகரீக காலத்தில் இரவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். மக்களின் உணவு பழக்க வழக்கங்கள் மாறியிருப்பது நோய்களுக்கு காரணமாக அமைகிறது. சொகுசு வாழ்க்கை என்ற அடிப்படையில், தங்களை மேம்படுத்தி கொள்வதாக நினைத்து, அன்றாட வாழ்க்கையில் அவர்கள் பல்வேறு தவறுகளை செய்து வருகின்றனர், இதனால் உடல் பருமன் ஏற்பட்ட பிறகு வரும் நோய்களுக்காக மருத்துவரை நாடி வருகின்றனர் என்கின்றனர் மக்கள். உடல் பருமன் ஏற்பட்ட பிறகுதான், உடலில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி வருத்தப்படவும் செய்கின்றனர். தினமும் நடைபயிற்சி, உணவில் கட்டுப்பாடு, தினம் தினம் மாத்திரைகள் போன்றவைகளை எடுத்துகொள்கின்றனர். அந்த வகையில், சர்க்கரை நோய் வந்த பின்பு காயங்களில் இருந்து தற்காத்து கொள்வது, உணவில் குறிப்பிட்ட உணவை எடுத்துக்கொள்வது என பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

சர்க்கரை நோய், இதய நோய், உடல் பருமன் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், இந்தியா நோய்களின் தலைநகராக மாறிவிடுமோ என்று மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். உடற்பயிற்சி இல்லாதது, உணவு முறை சீரற்ற தன்மை, தூக்கமின்மை போன்றவையே உடல் பருமனுக்கு மிக முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். இவற்றை சரியாக பின்பற்றவில்லை என்றால் மருந்து, அறுவை சிகிச்சை என அடுத்தடுத்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். எனவே, வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் பொதுமக்கள் தங்களை காத்து கொள்ள, சரியான உணவு பழக்கம், நல்ல தூக்கம், நடைபயிற்சி போன்றவை மட்டுமே ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்.

Exit mobile version