அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்திய பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட அதிபர் டிரம்ப் தயாராகி வருகிறார். இந்நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுபவரின் பெயர் இன்னும் வெளியாகவில்லை. இதில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன், இந்திய வம்சாவளி செனட்டர் கமலா ஹாரிஸ், செனட் சபை உறுப்பினர்கள் எலிசபெத் வாரன், கிர்ஸ்டன் கில்லிபிராண்ட் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வரிசையில் அமெரிக்காவின் முதல் இந்து பெண் எம்.பி.யான துளசி கப்பார்டின் பெயரும் பட்டியலில் இணைந்து இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, அமெரிக்காவுக்கு சொந்தமான சமோயா தீவை சேர்ந்த இவர், கடந்த 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளாக எழுச்சி பெற்று வரும் துளசி கப்பார்ட், தற்போது நாடாளுமன்றத்தின் முக்கிய குழுக்களில் அங்கம் வகித்து வருகிறார். பகவத் கீதையை சாட்சியாக வைத்து இவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.