பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர்க் கப்பல்கள் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இதையடுத்து, இருநாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல் தொடுக்க வாய்ப்பு இருப்பதாக இந்தியா கருதுகிறது. இதன் காரணமாக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு அரபிக் கடல் பகுதியிலும் இந்தியாவின் விமானம் தாங்கி போர்க் கப்பல்கள் அணி வகுத்துள்ளன. ஐ.என்.எஸ்., விக்கிரமாதித்யா உள்ளிட்ட 60 போர்க் கப்பல்கள், இந்திய கடலோர காவல் படையின் 12 போர்க்கப்பல்கள் வடக்கு அரபிக்கடல் பகுதியில் தயார் நிலையில், நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களான ஐ.என்.எஸ் அரிஹந்த், ஐ.என்.எஸ் சக்ரா ஆகியவையும் பாகிஸ்தான் போர்க்கப்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.