19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான 13 வது ஜீனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதன் முதல் அரையிறுதி போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் முகமத் ஹுரைரா 4 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான ஹைதர் அலி பொறுமையாக ஆடி 56 ரன்கள் எடுத்தால் அதேபோல், நசீர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களம் இறங்கிய மற்ற வீரர்கள் இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 43 புள்ளி 1 ஓவரில் 172 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் சக்சேனா ஆகியோர் சிறப்பாக ஆடி ரன்களை குவித்தனர். பாகிஸ்தானின் பந்து வீச்சர் திறம்பட எதிர்கொண்ட இருவரும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். ஜெய்ஸ்வால், 105 ரன்களும் சக்சேனா 59 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 35 புள்ளி 2 ஓவர்களில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் 4 முறை சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 3 வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில், சிறப்பாக ஆடி சதம் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 6 ஆம் தேதி நடக்கும் மற்றொரு அரையிறுதி போட்டியில் வங்கதேசம்- நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன.