இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
புனேவில் நடைபெற்ற கடைசி மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா, தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 37 ரன்கள் எடுத்திருந்த ரோகித் ஷர்மா, ரஷீத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த தவான் 67 ரன்களிலும், கேப்டன் கோலி மற்றும் ராகுல் ஆகியோர் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி, 157 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் பின் ஜோடி சேர்ந்த, ரிஷப் பந்த் – ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
சிறப்பாக ஆடிய பந்த் 78 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 64 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி 48 புள்ளி 2 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 330 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பென் ஸ்டோக்கஸ் 35 ரன்களிலும், கேப்டன் பட்லர் 15 ரன்களிலும் வெளியேற, இங்கிலாந்து அணி 257 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால், இந்திய அணி எளிதில் வெல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரண் இந்திய அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர் கொண்டு ரன்களை குவித்தார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 5 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து அணியை சேர்ந்த சாம் கரணுக்கு ஆட்ட நாயகன் விருதும், ஜானி பேர்ஸ்டோவிற்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.