5-வது டி20 போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த இந்திய அணி

5வது டி-20 போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை முழுமையாக வென்று சாதனை படைத்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டுக்கு எதிராக 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. ஏற்கெனவே 4-க்கு 0 என்ற கணக்கில் தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், 5வது டி-20 போட்டி, மவுண்ட் மவுன்கனி மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். சாம்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்த நிலையில், கே.எல். ராகுலுடன் கேப்டன் ரோகித் சர்மா இணைந்தார். அவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கே.எல். ராகுல், 45 ரன்கள் எடுத்திருந்தபோது பென்னெட் வீசிய பந்தில் கேட்ச் ஆகி வெளியேறினார். ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருந்த போது காயம் காரணமாக வெளியேறினார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், தொடக்க வீரர்களான குப்தில் 2 ரன்னிலும், முன்ரோ 15 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். டிம் சைஃபர்ட் மற்றும் ராஸ் டைலர் ஆகியோர் மட்டுமே அரை சதம் கடந்து ஆறுதல் அளித்தனர். மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி, 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்தியா, 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம், நியூசிலாந்து மண்ணில் அந்த அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.

Exit mobile version