பாகிஸ்தான் சிறையில் உள்ள குல்பூஷண் ஜாதவை இந்தியத் தூதரக அதிகாரி சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி 2016ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் தேதி பாகிஸ்தான் ராணுவம் அவரைக் கைது செய்தது. 2017ஆம் ஆண்டு குல்பூஷண் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து இந்தியா சர்வதேச நீதிமன்றத்துக்குச் சென்றதை அடுத்துக் குல்பூஷண் ஜாதவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்யுமாறு தீர்ப்பளித்தது. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷண் ஜாதவுக்குத் தூதரக உதவிகளைக் காலதாமதமின்றி வழங்கவும் சர்வதேச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில் இந்தியத் தூதரக அதிகாரி குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி வழங்கியது. இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துக்கு இந்தியத் தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா சென்றார். அங்கு முதலில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் முகமது பைசலைச் சந்தித்துப் பேசினார். அதன்பின் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்ட குல்பூஷண் ஜாதவையும் சந்தித்துப் பேசினார்.